Friday, April 26, 2013

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!-வைகோ

விளைநிலங்கள் பாழாகும்

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!
வைகோ அறிக்கை

“தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார் குடியின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எரிவாயுத் தேவைக்காக மீத்தேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈÞடெர்ன் எனர்ஜி கார்ப்பொரேசன் லிமிடேட்” என்ற நிறுவனத்திற்கு 29 ஜீலை 2010லேயே உரிமம் வழங்கி உள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கும் நிலப்பரப்பு பகுதிகளாக தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்களும் இதற்கு உட்பட்ட 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நிலங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.




இவற்றில் 24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பகுதி பழுப்பு நிலக்கரி எடுப் பதற்காக ஒதுக்கப்பட்டு, எஞ்சிய 667 சதுர கிலோ மீட்டர், அதாவது ஒரு லட் சத்து அறுபத்தி ஆறாயிரத்து இருநூற்று பத்து ஏக்கர் நிலப்பரப்பு மீத்தேன் வாயு எடுக்க ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

மீத்தேன் வாயு எடுப்பது என்பது எளிதான முறையல்ல. சுற்றுச்சூழல் முற்றி லும் பாதிக்கப்படும். விளை நிலங்கள் பாழாகும். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குப் போய்விடும்.

தஞ்சை மாவட்டத்தில்12 உள்ளுறை கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 38 உள்ளுறை கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன.

பூமிக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 500 அடி தொடங்கி 1650 அடி ஆழம் வரை நிலக்கரிப் படிமங்கள் காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலத்தடி நீர் இப்படிமங்களை அழுத்திக் கொண்டு உள்ளது. 

இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப் பாறைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. நிலக்கரி பாறை மீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயுவை வெளிக்கொணர முடியும். அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் இராட்சசக் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். அவ்வாறு 500 அடி முதல் 1650 அடி வரையுள்ள நிலத்தடி நீர் வெளியேற்றப்படும் போது காவிரி ஆற்றுப் படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கு கீழே சென்றுவிடும் பேரபாயம் நிகழும். நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிடுவதால் அப்பகுதி முற்றிலும் வறட்டு பாலைவனமாகப் போய்விடும் ஆபத்து உருவாகும்.

வங்கக் கடலோரப் பகுதிகளின் உப்பு கடல் நீர், உள்ளுறை கிணறுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் கலந்து ஒட்டுமொத்த நிலமும் பயனற்ற தேரிக்காடுகளாக, உப்பளங்களாக மாறிவிடும் அவலம் நேரும். வளங் கொழிக்கும் காவிரியாற்றுப் பாசனப் பகுதிகள் பாழ்பட்டு பயனற்றுப் போகும் ஆபத்து பெருந்திங்காக நம்மைச் சூழ்ந்துவிட்டது.

மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் பாதுகாத்து வந்த தங்களின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய நிலவளத் தை பறிகொடுத்து பரிதவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.

எனவே விவசாயிகளுக்கு ஒரே வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய காவிரி யாற்றுப்படுகை நிலங்களில் மீத்தேன், பழுப்பு நிலக்கரி எடுக்க நடைபெறு கின்ற முயற்சிகளை உடனடியாகக் கைவிட்டு விவசாயிகளின் விலைமதிப் பற்ற நிலங்களை பாதுகாக்க முன்வருமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                                          வைகோ,
சென்னை - 8                                                                                           பொதுச்செயலாளர்
26.04.2013                                                                                                  மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment